Iran Visa: இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


ஈரானுக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை:


கொரோனா தொற்றுக்குப் பின் இந்திய மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கென்று கொரோனாவுக்கு பின் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அந்நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்த்து வந்தனர்.


இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளில் சுற்றுலா மூலம் வரும் வருவாய் ஆனது பெரும் சரிவை சந்தித்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கென்று பல சலுகைகளை அறிவித்து வருகிறது.  உலகில் பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்லும் நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அதன்படி, இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அமலுக்கு வந்தது. இருப்பினும், விசாயின்றி இந்தியர்கள் ஈரான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 


கட்டுப்பாடுகள் என்ன?


சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் விசா இல்லாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் செல்ல முடியும். அப்படி வருபவர்கள், 15 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். எந்த காரணத்திற்காகவும் 15 நாட்களுக்கு மேல், ஈரானில் தங்க அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  






மேலும், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு மட்டுமே இந்த விசா முறை பயணம் பொருந்தும்.  இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வருபவர்கள் 15 நாட்களுக்கு பிறகு தங்க விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ,  அவர்கள் ஈரானிடம் உரிய விசாவை பெற வேண்டும். 


விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.


விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள்:


பார்படோஸ், பூடான், டொமினிகா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மான்ட்செராட், நேபாளம், ஹைதி, ஹாங்காங், நுயே தீவு, செயின்ட் வின்சென்ட் மற்றும் தி க்ரெனாடின்ஸ், சமோவா, செனகல், செர்பியா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது இந்த லிஸ்டில் ஈரான் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.