வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கி விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது சட்ட விரோதம் என மும்பை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.


வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கப்பட்டதில் முறைகேடா?


கடந்த 2012ஆம் ஆண்டு, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. கடன் அளிக்கப்பட்டதில் பல முறைகேடுகள் இருந்ததாக புகார் எழுந்தது. வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் அளிக்கப்பட்டதால் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


அதாவது, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்திற்கு அவர் கடன் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் நிறுவனமான நு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.


வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளித்த கடன், வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கி மோசடியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி, மோசடி மற்றும் முறைகேடு புகாரில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.


"சந்தா கோச்சார் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம்"


முதற்கட்ட சிபிஐ காவலுக்குப் பிறகு, அவர்களை டிசம்பர் 29ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்களை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் விடுதலையை செய்யக் கோரியும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி, அவர்களை நீதிமன்ற காவலில் இருந்து இடைக்காலத்திற்கு விடுவிக்க உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 41A-ஐ மீறி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.


இதை தொடர்ந்து நடைபெற்ற இறுதி விசாரணையின்போது, சந்தா கோச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், "வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தவில்லை. சந்தா கோச்சாரை விசாரிக்கக் கோரி ஐசிஐசிஐ நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக சந்தா கோச்சரும் அவரது கணவரும் வேறோர் மனு தாக்கல் செய்துள்ளனர். கோச்சரும் அவரது கணவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடைமுறைகளை மீறி கைது செய்யப்பட்டனர்" என்றார்.


சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குல்தீப் பாட்டீல், "விசாரணைக்கு சந்தா கோச்சார் ஒத்துழைக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் அவர்களுக்கு எதிராக ஆதாரம் இருக்கிறது" என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்.ஆர். போர்கர், "சந்தா கோச்சாரக்கும் அவரது கணவருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால விடுதலையை" உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.