உலகளவிலான வானியல், வானியற்பியல் முதலான அறிவியல் பிரிவுகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர் இந்திய ஆய்வு மாணவர்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் முதலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று வானியல் ரீதியான மிகப்பெரிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பேராசிரியர், ஒரு ஆய்வு மாணவர், ஒரு இளங்கலை மாணவர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுக் குழு பிற கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியங்களை ஆய்வு செய்து, அதில் நம்பிக்கையை விதைக்கும் விளைவுகள் குறித்து தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும், ஒரு சாத்தியம் மட்டுமின்றி, சுமார் 60 சாத்தியங்களை இந்த ஆய்வுக் குழு கண்டறிந்து தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுரையில், இந்திய வானியல் ஆய்வாளர்கள் செய்த இந்தச் சாதனையைப் பற்றி கூறியுள்ளோம். 


Monthly Notices of the Royal Astronomical Society (MNRAS) என்ற ஆய்வு மாத இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பல்வேறு ஆய்வாளர்களும் கற்பனை என நினைத்துக் கொண்டிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது இந்திய ஆய்வுக் குழு. இந்த ஆய்வுக் குழு அளித்திருக்கும் தகவல்களின்படி, உயிர்வாழ்வதற்குத் தகுதியானவை என உறுதிசெய்யப்பட்ட 5 ஆயிரம் கிரகங்களுள் 60 கிரகங்கள் நிச்சயமாக உயிர்வாழத் தகுதி வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. உயிர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பிரபஞ்சத்தில் பூமியை முரண்பாடு எனக் கருதி, அதன் மூலம் டேட்டா உற்பத்தி செய்து வெவ்வேறு முரண்பாட்டுப் புள்ளிகளைக் கண்டறிந்துள்ளது இந்த ஆய்வுக் குழு. 



உயிர் வாழத் தகுதியற்ற கிரகங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், இந்த ஆய்வின் மூலம் உயிர் வாழத் தகுதியுள்ள கிரகங்கள் முரண்பாடானவையாகக் கருதப்பட்டு, அவை வெவ்வேறு குறியீடுகளின் மூலமாகக் கணக்கிடப்பட்டு கண்டறியப்பட்டுள்ளன. 


Multi-Stage Memetic Binary Tree Anomaly Identifier (MSMBTAI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் multi-stage memetic algorithm (MSMA) என்ற அடிப்படையின் கீழ் இயங்குகிறது. ஒருவரிடம் இருக்கும் ஞானம் மற்றொருவருக்கு அவர் அதனைப் பார்த்து அதனைப் போலவே செய்வதாகப் பரிமாற்றம் கொள்கிறது என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த multi-stage memetic algorithm (MSMA) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயிர்கள் வாழ்வதற்கான தகுதிகளைக் குறியீடுகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோரும், கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியைச் சேர்ந்த கார்த்திக் பாட்டியா, ஆய்வு மாணவர் ஜோதிர்மாய் சர்கார் ஆகியோரும் இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு பிட்ஸ் பிலானியின் பேராசிரியர் ஸ்னேகன்ஷு சாஹா, பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் மார்கரிடா சஃபோநோவாவும் இந்த ஆய்வில் வழிகாட்டியுள்ளனர்.