Indian Railways: படுக்கை வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்திய ரயில்வே அறிவிப்பு:
இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும் அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ஆய்வு செய்தார். இது தவிர வந்தே மெட்ரோவும் தயாராக உள்ளது. இந்நிலையில், மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு & கட்டுமானத்திற்கான ஏலம்:
தகவலின்படி, 2 ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான ஏலங்களை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. இந்த ரயில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம், இந்திய ரயில்வே, தலா 8 பெட்டிகள் கொண்ட இரண்டு ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில் செட் ரேக்குகளை உருவாக்குமாறு சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரிக்கு (ஐசிஎஃப்) கடிதம் எழுதியிருந்தது. மேலும் ரயில் பெட்டியை எஃகு மூலம் அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகவும், நடை வேகம் மணிக்கு 220 கிமீ ஆகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் - மணிக்கு 160 கிமீ வேகம்:
இதனிடையே, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பயண வகுப்புகள் இதில் வைக்கப்பட்டுள்ளன. வந்தே பாரதத்தில் பல நவீன வசதிகள் உள்ளன. இந்த ரயில் பயணிகளுக்கு முற்றிலும் புதிய பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை BEML இன் பெங்களூரு ரயில் வளாகத்தில் ஆய்வு செய்தார். இந்த ரயிலில் உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் உள்ளன. இதில் USB சார்ஜிங், ரீடிங் லைட், டிஸ்ப்ளே பேனல், பாதுகாப்பு கேமராக்கள், மாடுலர் பேண்ட்ரி மற்றும் நவீன டாய்லெட் ஆகியவை அடங்கும்.
அடுத்த இலக்கு மணிக்கு 250 கிமீ வேகம்:
வந்தே பாரத் ஸ்லீப்பர் நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும், எனவே பயணிகளின் ஒவ்வொரு வசதிக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இதுவாகும். இது கவாச் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். இதன் வேகமும் மணிக்கு 160 கி.மீ. இந்த இலக்கை எட்டிய பிறகு, அடுத்த இலக்கு மணிக்கு 250 கி.மீ., வேகம் என இந்திய ரயில்வே நிர்ணயித்துள்ளது.