இந்திய ரயில்வே துறைக்கு 2021-2024 (ஜனவரி,2024) -ம் ஆண்டு வரையில் காத்திருப்பு பட்டியல் (Waiting List Tickets) பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.1,229 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காத்திருப்பு பட்டியல் பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரயில்வே துறைக்குக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமான உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்மூலம், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே. இவர் கடந்த 2021 முதல் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் காத்திருப்பு பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்திய ரயில்வே-க்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்து விவரங்களை கோரியுள்ளார்.
ஆர்.டி.ஐ. -க்கு இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “2021-ம் ஆண்டில், காத்திருப்பு பட்டியலில் சுமார் 2.3 கோடி (25.3 மில்லியன்) டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022- ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4 கோடியே 60 லட்சமாகஅதிகரித்தது. இதில் ரூ.439.16 கோடி வருவாய் கிடைத்தது. 2023-ம் ஆண்டில், 5 கோடியே 26 லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது.
ஜனவரி, 2024 மாதத்தில் மட்டும் 4.586 மில்லியன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 12.8 கோடிக்கும் அதிகமான காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன என்று அரசு வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது.
ரத்துசெய்யும் கட்டணங்கள் பயணத்தை பொறுத்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. வகுப்புகளுக்கான பயணச்சீட்டு ரத்து கட்டணங்கள் ரூ.120 முதல் ரூ.240 வரை உள்ளது.
இந்திய ரயில்வேயின் பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று ரயில்வே நிர்வாகம் சொல்கிறது.