நாட்டின் 75வது சுதந்திர தினத்தை விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ் என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளது.


அந்த வகையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுதலைப் போருடன் தொடர்புடைய 75 ரயில் நிலையங்கள் மற்றும் 27 ரயில்களை நினைவுகூர்ந்து கொண்டாடும் விழா தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் ஜூலை 18 தொடங்கிய இந்த விழா ஒரு வாரம் நடத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


ஆஸாதி கி ரெயில் காடி அவுர் ஸ்டேஷன்ஸ் (Azadi ki Rail Gaudi aur Stations) என்று இந்த நிகழ்வுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நேற்று மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது.


இது குறித்து ரயில்வே வாரிய சேர்மன் மற்றும் சிஇஓ, ஸ்ரீ வினய் குமார் திரிபாதி கூறுகையில், விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ் விழாவை ஒட்டி ஆசாதி கி ரெயில் காடி அவுர் ஸ்டேஷன்ஸ் என்ற நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. இது விடுதலை வீரர்களின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும். இது ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்த 75 ரயில் நிலையங்களில் 5 ரயில் நிலையங்கள் மேற்கு ரயில்வேயை சேர்ந்தது. ஆகையால் இவை அனைத்தும் இந்த வாரம் முழுவதும் மூவர்ண ஒளியால் மின்னும். டிஜிட்டல் ஸ்க்ரீன் மூலம் விடுதலை வீரர்கள் பற்றி எடுத்துரைக்கப்படும். தேசபக்தி பாடல்கள், நாடகங்கள், ஒலி ஒளி காட்சிகள் ஆகிய ரயில் நிலையங்களில் நடத்தப்படும்.






அது மட்டுமின்றி ஆங்காங்கே விடுதலை வீரர்கள் புகைப்படங்கள் அடங்கிய செல்ஃபி பாயின்ட்டுகள் அமைக்கப்படும். மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட 5 ரயில் நிலையங்களில் மகாத்மா காந்தி பிறந்த ஊரான போர்பந்தர் ரயில் நிலையம். குடிசை தொழிலை ஊக்குவிக்க மகாத்மா காந்தி தோற்றுவித்த சபர்மதி ஆசிரம ரயில் நிலையம், உப்பு சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி போராட்டம் நடத்திய நவ்சாரி ரயில் நிலையம், பர்தோலி ரயில் நிலையம் ஆகியன அடங்கும்.


அது போல் மேற்கு ரயில்வேயின் 9 ரயில்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றன. லோக்சக்தி எக்ஸ்பிரஸ், ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், சபர்மதி எக்ஸ்பிரஸ், அஹிம்ஸா எக்ஸ்பிரஸ், குஜராத் மெயில், அகமதாபாத் புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியனவும் அடங்கும்.


தெற்கில் எங்கு?
இதேபோல் தெற்கு ரயில்வேயும் ஆசாதி கி ரெயில் காடி அவுர் ஸ்டேஷன்ஸ் நிகழ்ச்சியைக் கொண்டாடுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 ரயில் நிலையங்கள் பின்வருமாறு:
1.    திருவல்லிக்கேணி (MRTS) மற்றும் சுப்பிரமணிய பாரதியார்
2.    திருப்பூர் மற்றும் தியாகி திருப்பூர் குமரன்
3.    வாஞ்சி மணியாச்சி மற்றும் வாஞ்சிநாதன்
4.    வேலூர் கண்டோன்மன்ட் மற்றும் வேலூர் கழகம்
5.    நீலாம்பூர் ரோடு மற்றும் பழசி ராஜா