இணையதளங்களில் செய்திகள் வாயிலாக பெரும் தொழில் நிறுவனங்கள் கோடிகணக்கில் லாபத்தை ஈட்டுகிறது. அந்த லாபத்தில் ஒரு பங்கை செய்தி வெளியீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது.
கிடைக்கும் வருவாயில் இருந்து செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பங்கினை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டவை சட்டம் இயற்றியுள்ளது.
இந்நிலையில், செய்தி வெளியீட்டு நிறுவனங்கள், செய்தி சேகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இணைய செய்திகள் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் (டிஎன்பிஏ) ஏற்பாடு செய்த ஒரு நாள் மாநாட்டின் தொடக்க அமர்வில் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசினர்.
இருவரும் பத்திரிகையின் எதிர்காலம் மற்றும் செய்தித் துறையில் நிதி நிலையை மேற்கோள் காட்டினர். அப்போது, பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "செய்தித் துறையின் வளர்ச்சிக்கு அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களான டிஜிட்டல் செய்தித் தளங்கள், பிறரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படும் பெரிய தொழில்நுட்ப தளங்களில் இருந்து வருவாயில் நியாயமான பங்கைப் பெறுவது முக்கியம்.
உள்ளடக்க உருவாக்கம், அதை பணமாக்குவது, விளம்பர-தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இயங்குதளங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு சிக்கலை தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்.
இணையத்தின் கட்டமைப்பே உள்ளடக்க உருவாக்கம் மற்றும் அதன் பணமாக்குதலின் இயக்கவியலில் ஆழமான உள்ளமைந்த ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தது. சிறிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளில் செய்தி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே நியாயமான வருவாயைப் பகிர்ந்து அளிப்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தை இயற்றி தங்கள் போட்டிக் கமிஷன்களை வலுப்படுத்தியுள்ளன" என்றார்.
17 செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்பாக டிஜிட்டல் செய்திகள் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு செய்தி வெளியீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீக காலமாக, டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.