ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக இருப்பது நாடாளுமன்றமும் நீதிமன்றமும் ஆகும். ஆனால், இந்தியாவில் சமீப காலமாகவே, இந்த இரண்டு துறைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 


இதற்கு காரணமாக இருப்பது கொலீஜியம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.


ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.


ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.


இதற்கு, நீதித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தேர்தல்களை போட்டியிட வேண்டியதில்லை அல்லது அவர்கள் விசாரணையை எதிர்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகளின் மூலம் பொது மக்கள் அவர்களை பார்த்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மக்கள் உங்களைப் பார்த்து மதிப்பிட்டு வருகின்றனர். உங்கள் தீர்ப்புகள், உங்கள் செயல்பாடுகள் வழியாக நீங்கள் எப்படி நீதி வழங்குகிறீர்கள் என்பதை கவனித்து வருகின்றனர். உங்களை பற்றிய கருத்துக்களை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.


1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று நினைப்பது தவறானது. அது ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. மாறிவரும் சூழ்நிலையே தேவையை தீர்மானிக்கிறது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் நூறு முறைக்கு மேல் திருத்தப்பட வேண்டியிருந்தது" என்றார்.


மூத்த அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் குடியரசு துணை தலைவர்கள் உள்ளிட்டோர், கொலீஜியம் அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.


கடந்த 1993ஆம் ஆண்டு முதல் கொலீஜியம் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. கொலீஜியம் அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தொடர் கருத்துகளை தெரிவித்து வருகிறது.