இரண்டு கடற்படை அதிகாரிகள் பாராசூட் மூலம் கீழே இறங்கும் போது அவர்களின் பாராசூட்டுகள் சிக்கி, கடலில் விழுந்த காட்சியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த காட்சியானது, தற்போது வைரலாகி வருகிறது.
ஆந்திரா கடற்படை ஒத்திகை:
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம கிருஷ்ணா பகுதியில், இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்றைய தினம் ( ஜனவரி 2 ஆம் தேதி ) சோதனை ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது , இரண்டு அதிகாரிகள் பாராசூட் மூலம் வானிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இருவரின் பாராசூட்டும் ஒன்றுக்கொன்று சிக்கி கொண்டது. இதனால், அவர்கள் இருவரும் கட்டுப்பாட்டை இழந்து வானில் சுற்ற ஆரம்பித்தனர். இதையடுத்து, அவர்களது நிலைமை மோசமானது. இந்த காட்சிகளை பார்க்கையில், மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கிறது.
பாராசூட் சிக்கி கொண்ட காட்சிகள்:
இந்த காட்சியானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியை பார்க்கையில், “ ஒரு கடற்படை அதிகாரி தேசியக் கொடியுடன் இறங்கியதும், மற்றொரு அதிகாரியின் பாராசூட் சிக்கிக் கொண்டதும் அவர்களின் பாராசூட் சிக்கியது. இரண்டு அதிகாரிகளும், கட்டுப்படுத்த முடியாமல் கரைக்கு அருகில் உள்ள தண்ணீரில் விழுவதையும் பார்க்க முடிகிறது.
காயமின்றி தப்பிய அதிகாரிகள்:
இதையடுத்து, உடனடியாக கடற்படை அதிகாரிகள் வேகமாக வந்து அவர்களை மீட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படையின் நிகழ்ச்சியானது, நாளை ( ஜனவரி 4 ஆம் தேதி)ஆந்திரா - ராமகிருஷ்ணா கடற்கரையில் ஜனவரி 4 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த ஒத்திகையை காண ஏராளமானோர் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று வந்திருக்கின்றனர்.
அப்போது நடந்த ஒத்திகையின் போதுதான் இந்த நிகழ்வானது நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இருவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், பத்திரமாக தரையிறங்கியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.