இந்திய பாதுகாப்புத்துறையில் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,585 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 273 பெண்களும் அடங்குவர்.
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு தொடர்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. அக்னிபாத் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 46 ஆயிரம் இளைஞர்களை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களில் 25% மட்டுமே நிரந்தரமாக பணி புரிய வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் பல மாநிலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைய 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4 வருட பணிக்கு 6 மாதம் மட்டுமே பயிற்சியும் வழங்கப்படும். இப்படியான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெண்களும் அக்னிவீரர்கள் ஆக முடியும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. பாதுகாப்புத் துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. 4 வருட பணிக்குப் பிறகு அக்னிபாத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது என ஏகப்பட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2,585 அக்னி வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் விரைவில் முப்படைகளிலும் இணைக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்திய கடற்படையில் இதுவரை அதிகாரிகள் தரவரிசையில் இருந்த பெண்கள், இனி மாலுமிகளாகவும் செயல்படுவர். இது இளம் பெண்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் எனவும், இந்திய கடற்படையின் சாதனை எனவும் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் தேர்ச்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றபின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.