பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது என்ற அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29ஆம் தேதி) காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. வரும் மே மாதத்துடன் கர்நாடக சட்டமன்றத்திற்கான பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வந்தது. இந்நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், கூடுதல் பரபரப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன.
ஏற்கனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இது காங்கிரஸின் தெளிவான அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. காங்கிர்ஸுடன் கைகோர்க்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள 100 தொகுதிகளில் ஒதுக்கீடு வழங்கப்படவே இந்த நகர்வு என கூறப்படுகிறது.
அதேபோல் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீப காலத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அதேபோல் பிரதமர் மோடியும் கர்நாடகாவில் 13.71 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை கர்நாடகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள அனைவரும் கர்நாடகாவிற்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது குறிப்பிடத்த்க்கது. இம்முறை பெரும்பான்மையை வெல்ல அனைத்து கட்சிகளும் பெரும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன.