கொசுக்கள் வழியாக பரவும் டெங்கு காய்ச்சல், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை தந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 31,464 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் டெங்கு:


இந்த ஏழு மாத காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதன் பரவல் குறைந்திருந்தாலும், 2020 முதல் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 சதவிகிதம் அதிகரித்தது. 2021 மற்றும் 2022க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரித்ததாக தேசிய நோய் தடுப்பு மையம் தகவல் தெரிவிக்கிறது.


பொது சுகாதாரத்திற்கு பெரும் சவால் விடுத்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணி வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியை வெளியிடுவதில் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி நிலவி வருகிறது.


டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி:


குறிப்பாக, தடுப்பூசியை வெளியிடுவதில் இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (ஐஐஎல்) என்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்வோம் என ஐஐஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. ஆனந்த் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனைகள் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் 90 நபர்களிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை. நாங்கள் முதல் கட்ட சோதனைகளை முடிக்க உள்ளோம். அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். 


இதற்கெல்லாம் குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் ஆகும். எனவே, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்,  தடுப்பூசியை வணிக பயன்பாட்டுக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறோம். பாதுகாப்பு காரணியையும் செயல்திறனையும் தீர்மானிக்க ஆரம்ப கட்ட சோதனை ஓரளவுக்கு உதவுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனம் (NIH) தடுப்பூசியை உருவாக்கத் தேவையான வைரஸை எங்கள் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது" என்றார்.


ஐ.ஐ.எல் நிறுவனத்தை தவிர, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பானக்கியா பயோடெக் போன்ற இந்திய நிறுவனங்களும் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை தயாரிக்க முயற்சி செய்து வருகிறது.


ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஐஐஎல் நிறுவனம், விலங்குகள் மற்றும் மனித தடுப்பூசிகளை 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ரேபிஸ் நோயுக்கான தடுப்பூசிகளை தயாரிப்பதே ஐஐஎல் நிறுவனத்தின் முக்கிய பணியாகும். உலகளவில் விற்பனை செய்யப்படும் ரேபிஸ் தடுப்பூசிகளில் 35 சதவிகிதம் ஐஐஎல் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள்தான்.