பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு அரசின் இறுதிச் சடங்கு:

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விரிவாக பேசுகையில், "பொதுமக்களின் இறுதிச் சடங்குகளில் சவப்பெட்டிகளின் மீது தேசியக் கொடி போர்த்தப்படுவதும் அரசு மரியாதை செலுத்தப்படுவதும் விந்தையானது. இந்த இடங்களில் கொல்லப்பட்ட நபர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்குகள் செய்வது பாகிஸ்தானில் ஒரு நடைமுறையாக இருக்கலாம்.

ஆனால், அது எங்களுக்குப் புரியவில்லை. நேற்று, ஜம்மு-காஷ்மீரின் சீக்கிய சமூகத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பூஞ்சில் ஒரு குருத்வாராவைத் தாக்கி, சீக்கிய சமூக உறுப்பினர்களைத் தாக்கியது. தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பூஞ்சில் மொத்தம் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பயங்கரவாதக் குழுக்களுடன் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பா?

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இது நிரூபணமாகியுள்ளது. ஒசாமா பின்லேடன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார். அவரை தியாகி என்று யார் அழைத்தார்கள் என்பதை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை.

ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கும், பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும்பாகிஸ்தான் தாயகமாகும். கடந்த சில நாட்களில், அவர்களின் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் தங்கள் நாட்டின் தொடர்பை ஒப்புக்கொண்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பஹல்காம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, ​​டி.ஆர்.எஃப் (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) பயங்கரவாத அமைப்பின் பங்கு இருப்பதாக கூறியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய பாதுகாப்பு படை விளக்கம்:

இந்தத் தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப் ஒரு முறை அல்ல, இரண்டு முறை பொறுப்பேற்ற பிறகு இது நடந்தது. இந்தியாவின் பதில் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாத அணுகுமுறையாக இருந்தது, துல்லியமானது, கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று கர்னல் குரேஷியும் விங் கமாண்டர் சிங்கும் நேற்றும் இன்றும் தெளிவாகக் கூறினர்.

எங்கள் நோக்கம் விஷயங்களை மேலும் தீவிரப்படுத்துவது அல்ல. தீவிரமான நிலைமைக்கு பதில் மட்டுமே அளித்துள்ளோம். பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளது" என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், "ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பதற்றம் அதிகரிக்காமல் இருப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன. பாகிஸ்தான் ராணுவமமும் இதை செய்ய வேண்டும் என நம்புகிறோம்" என்றார்.