ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ராணுவம் தள்ளப்பட்டதாக, ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது என்ன.? பார்க்கலாம்...
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறி அல்ல என இந்தியா ஏற்கனவே விளக்கம்
இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவதற்காக நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும், போரை நோக்கிய நகர்வு ஏதும் இல்லை என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறி வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு சொன்னதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் ஏதும் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
7-ம் தேதி இரவு, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிரித்ஸர், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, பதின்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் புஜ் ஆகிய இடங்களை குறி வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்களை ஏவுகணை தடுப்பு அமைப்பை வைத்து முறியடித்ததாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நிரூபிக்கும் வகையில், தாக்குதல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை, இந்திய ராணுவம், பாகிஸ்தானின் வான் தற்காப்பு ராடார்கள் மற்றும் அமைப்புகளை குறி வைத்து பல இடங்களில் தாக்கியதாகவும், பாகிஸ்தான் எந்த அளவிற்கு தாக்குதல் நடத்தியதோ, அதே அளவில்தான் இந்திய ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அந்த தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாகவும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உள்பட 16 அப்பாவி உயிர்களை பறித்த பாகிஸ்தான் ராணுவம்
இதனிடையே, கனரக பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும், அதில், 3 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 16 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே, பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்தும் விதமாக இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
இப்போதும் கூட, போரை நோக்கி சூழ்நிலையை நகர்த்திச் செல்ல மாட்டோம் என்று இந்திய ராணுவத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும், ஆனால், அது இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் ராணுவம் மதிக்கும் வரைதான் என்றும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது இந்திய ராணுவ அமைச்சகம்.