நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,730 ஆக உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் குறைபாடும் ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. 


இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் நடமாடும் மொபைல் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உதவி செய்துள்ளார். இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் மூலம் ஒருநாளைக்கு 1500 மாதிரிகள் வரை சேகரித்து முடிவை அறிவிக்க முடியும். மேலும் இதில் கொரோனா பரிசோதனை முடிவுகள் 4 மணி நேரத்திற்குள் தெரிந்துகொள்ளலாம்.  






இந்த மையத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மற்றவர்களுக்கு இங்கு 500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதை புனேவில் உள்ள மை லேப் டிஸ்கவரி சொலியூஷன்ஸ் என்ற ஆய்வுக்கூடம் நடத்த உள்ளது. 


தற்போது புனேவில் ஒருநாளைக்கு 20 ஆயிரம்  பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை மையங்களை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹர்பஜன் சிங் உதவியுள்ளார். 






ஹர்பஜன் சிங்கின் இந்தச் செயலை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். இதற்கு ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.