சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தேடுதல் வேட்டை தோல்வி:


கடந்த மூன்று நாள்களாக, அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கிய போதிலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின.


இருப்பினும், அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.


இதில், காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் இருதினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். 


காவல்துறைக்கு தண்ணி காட்டும் அம்ரித்பால் சிங்:


இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த பிரச்னை, பஞ்சாப்பை பதற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. பஞ்சாப் மட்டும் இன்றி, பிற நாடுகளிலிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூவர்ண கொடியை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அதேபோல, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காலிஸ்தானி ஆதரவாளர்கள் அடாவடி:


இந்திய தூதரகத்தின் கட்டிடத்தில், 'அம்ரித்பாலை விடுதலை செய்யுங்கள்' என வாசகங்களை எழுதி சர்ச்சையை கிளப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், தூதரக கட்டிடங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து உடைப்பது போல பதிவாகியுள்ளது.


இந்தியத் தூதரகத்தின் ஊழியர்கள் மூன்று பேர், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் கொடிகளை அகற்றுவதும் அதில் பதிவாகியுள்ளது. 


பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக காவல்துறை மேண்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் பிரிட்டன் தூதர் கிறிஸ்டினா ஸ்காட்டுக்கு இது தொடர்பாக நேற்று சம்மம் அனுப்பியது.