கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கப்பல் எம்.வி. வான் ஹாய் 503இல் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி), இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.

நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்:

இவை இணைந்து, நேற்று (ஜூன் 13, 2025) கடலில் தீ விபத்தில் சிக்கிய கப்பலை வெற்றிகரமாக இழுத்துச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், பலத்த காற்று ஆகியவை காரணமாக அந்தக் கப்பல் கரையை நோக்கி ஆபத்தான முறையில் நகர்ந்தது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 13ஆம் தேதி) கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிகாப்டர், மிகவும் சவாலான சூழ்நிலையில் மீட்புக் குழு உறுப்பினர்களை கப்பலில் வெற்றிகரமாக இறக்கியது. பின்னர், அந்தக் குழு கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் 600 மீட்டர் இழுவைக் கயிற்றுடன் இணைத்தது.

இந்திய விமானப்படையுடன் கைகோர்த்த கடற்படை:

இந்தக் கப்பல் இப்போது 1.8 கடல் மைல் வேகத்தில் மேற்கு நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் 35 கடல் மைல்கள் தொலைவு உள்ளது. கடலோர காவல் படையின் 3 ரோந்துக் கப்பல்கள், அந்த தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, ​​கப்பல் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்துள்ளது. 

 

சர்வதேச விதிமுறைகளின்படி, அதன் உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படும் வரை, கப்பல் இந்திய கடற்கரையிலிருந்து குறைந்தது 50 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய கடலோர காவல் படை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கூடுதல் தீயணைப்பு இழுவைக் கப்பல்கள் வருவதால் நிலைமை மேலும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.