பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய ராணுவம், அடுத்ததாக, தீவிரவாதிகளுக்கு எதிராக, ஆபரேஷன் கெல்லர் என்ற தேடி அழிக்கும் வேட்டையை தொடங்கியுள்ளது. அது குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய இந்திய ராணுவம்
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வேட்டையை, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு இந்திய ராணுவம் தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரகாதிகளின் நிலைகளை தாக்கி அழிக்கும் இந்த ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தது இந்திய ராணுவம். ஒரே இரவில், ஒரே நேரத்தில் தீவிரவாதிகளின் 9 நிலைகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்தது இந்திய ராணுவம். ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பாகிஸ்தானால் முறியடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம், பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை தொடங்கியது. இதையும் வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து விரட்டியது. இதைத் தொடர்ந்த, இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் பல்வேறு நாடுகளின் உதவியை நாடியது. இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையே சமசரம் செய்துவைக்க தயார் என அறிவித்த அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதாக கூறிய மோடி
இந்த நிலையில், நேற்றிரவு நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாததால், போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்சியதாகவும், அந்நாட்டு ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு, தாக்கதலை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தியதாகவும், இனி இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என கூறியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இனி எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அது போராகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இது தற்காலிக போர் நிறுத்தம்தான், எந்நேரமும் தாக்குதல் நடத்த முப்படைகளும் தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார் மோடி.
இந்திய ராணுவம் தொடங்கிய ‘ஆபரேஷக் கெல்லர்‘
தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இன்று ஆபரேஷன் கெல்லர் என்ற தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.
குறிப்பிட்ட உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், சோபியானில் உள்ள ஷுகல் கெல்லர் என்ற இடத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதுதான் இந்த ‘ஆபரேஷன் கெல்லர்‘.
அதன்படி, இன்று அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 3 முக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சூட்டுக்கொன்றுள்ளது.
அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.