உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா இருக்கும் என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு:
பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாக கடந்த 2010ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2019ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும், மாநாடு நடப்பாண்டு தென்னாப்ரிக்காவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி:
தலைநகர் ஜோகன்ஸ்பர்க்கில் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, தென்னாப்ரிக்க அதிபர் சிறில் ரமாபோசா விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதோடு, பிரேசில், சீனா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளின் தலைவர்களும், ரஷ்யா தரப்பில் அதிபர் புதினின் பிரதிநிதியும் பங்கேற்றுள்ளார்.
உல வளர்ச்சிக்கான இன்ஜின்:
நேற்று மாலை நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் சந்திப்பில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ”2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். கொரோனா தொற்றானது மீண்டு வருவது மற்றும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. இதை அடைய பரஸ்பர நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியம். உலகளாவிய நலனுக்காக நாம் கூட்டாகச் செயல்பட முடியும் மற்றும் அதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும். இந்தியா விரைவில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் வளர்ச்சி இன்ஜினாக விளங்கும். எனது தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் "மிஷன்-மோட்" சீர்திருத்தங்களால் எளிதாக வணிகம் செய்ய முடிகிறது.
தலைவர்களை சந்திக்க உள்ளேன்..
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் உருவாகியுள்ளது. நாட்டில் 100க்கும் மேற்பட்ட யூனிகான்கள் இருக்கிறது. இங்கு வந்துள்ள தலைவர்கள் உடன் தனிப்பட்ட முறையில் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளேன்” எனவும் பிரதமர் மோடி பேசினார். ஆனால், இந்த வர்த்தக மன்ற தலைவர்களின் சந்திப்பில் சீன அதிபர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை..
தொடர்ந்து, இன்றும் நாளையும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதேநேரம், உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.