மனிதர்களாக பிறப்பவர்களை மனிதர்கள் என்று வெளிக்காட்டுவது அவர்களின் மனிதத்தன்மையே ஆகும். இந்த மனிதத்தன்மையின் வெளிப்பாட்டின் காரணமாகவே இந்த உலகில் பல உயிர்களும் மனிதர்களும் இணைந்து இன்றும் அன்புடன் வாழ்வதற்கு இந்த மனிதமே அடிப்படையாக விளங்குகிறது. அதுபோன்ற ஒரு மனிதத்தன்மையை காட்டும் செயல் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.


காட்டாற்றில் சிக்கிய நாய்:


தற்போது, இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. வட இந்தியாவைப் போல காட்சி தரும் அந்த பகுதியில் மிகப்பெரிய கால்வாய் ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தின்போது நாய் ஒன்று கால்வாயில் இருந்து நீர் ஆற்றுக்கு செல்லும் பாதையில் மாட்டிக்கொண்டது.






தண்ணீரின் வேகம் அதிகரித்து ஆற்றில் பெரும் வெள்ளம் ஓடியதால் நாயால் கரைக்கு வரமுடியவில்லை. அதே சமயத்தில் கால்வாயின் வழியாக வந்த பாதை வழியே மீண்டும் திரும்பி செல்லவும் முடியவில்லை. இதனால், நாய் சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் நாய் குரைத்துக்கொண்டு இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியே வந்தவர்கள் நாய் சிக்கிக்கொண்டு பரிதவிப்பதை பார்த்துள்ளனர்.


அந்த நாயை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நீளமான கயிறு மூலம் கால்வாயின் கீழ் பகுதியில் இளைஞர் ஒருவர் இறங்கியுள்ளார். ஏற்கனவே ஆபத்தில் இருந்த நாய் அவரை பார்த்ததும் சற்று ஆறுதல் அடைந்தாலும், அவர் அருகில் செல்ல முடியாத நிலையில் இருந்தது.


காப்பாற்றிய இளைஞர்:


இதனால், அந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நாய் அந்த இளைஞர் அருகே வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டாற்று வெள்ளத்தின் கரை அருகே நின்று கொண்டிருந்த இளைஞர், அந்த நாய் தனது அருகில் வந்ததும் லாவகமாக நாயை பிடித்தார்.


பின்னர், நாயை சுமந்து கொண்டு அந்த இளைஞர் கயிற்றை பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தார். நாயையும், அந்த இளைஞரையும் அருகில் மேலே இருந்த இளைஞர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். இன்ஸ்டாகிராமில் ரோயாதேவ் என்பவர் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


4.1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த வீடியோவை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் நிலையில் இருந்த நாயை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.