பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நடக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த விதமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் உடன்படவில்லை.


பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு:


போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த போதிலும், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தது. 


போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


இந்த நிலையில், பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருப்பதை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 145 நாடுகள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் நேபாளம் உள்ளிட்ட 18 நாடுகள் தீர்மானத்தை புறக்கணிக்க செய்தன.


இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருக்கும் இந்தியா:


இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைபாடு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை கண்டித்திருந்தாலும் இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபரிடம் மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.     


தனிநாடாக இஸ்ரேல் உருவான உடனேயே, அந்நாட்டை இந்தியா அங்கீகரித்த போதிலும், பல ஆண்டுகாலம் இரு நாடுகளுக்கிடையே தூதரக ரீதியான உறவு இல்லாமல் இருந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு, தூதரக உறவு நிறுவப்பட்ட பிறகுதான்,  தூதரகங்கள் திறக்கப்பட்டது. அதற்கு பிறகும் கூட, நெருக்கமான உறவு இருந்துவிடவில்லை.


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்த பிறகுதான், இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேண தொடங்கியது. வரலாற்றில் முதல்முறையாக இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், டெல் அவிவ் நகருக்கு பிரதமர் மோடி கொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாலஸ்தீன நகருக்கு செல்லாமல் அவர் தவிர்த்ததுதான்.