நாட்டிலேயே முதல் முறையாக கடற்பசு பாதுகாப்பகம்  அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


கடற்பசு பாதுகாப்பகம்:


தமிழ்நாட்டின் பாக் நீரிணையில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 448 சதுர கி.மீ பரப்பளவு கடலோர பகுதி கடற்பசு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் காணப்படுவதால், அவற்றை அழிவின் விழிம்பின் இருந்து பாதுக்காக்க, பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


தமிழ்நாடு அரசு அரசாணை:


தமிழ்நாட்டில் அழிந்து வரக்கூடிய அரிதான கடற்பசு இனங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடா பாக் நீரிணை பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டபேரவையில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடற்பசுக்களை பாதுகாப்பது தொடர்பாக பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 448 சதுர கி.மீ பரப்பளவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


கடல்களில் புற்களை உண்டு வாழும் பாலூட்டி இனங்களான கடற்பசுக்களை பாதுகாப்பதன் மூலம் கடற்புற்களை பாதுகாக்க முடியும் என்றும், அதன்மூலம் மீன் வளங்களை அதிகப்படுத்த முடியும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. கடற்பசுக்களை இனங்களை பாதுகாப்பதால், வளிமண்டல கார்பனை அதிகளவில் நிலைப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வன விலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை 1-ன் கீழ் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், அதன் வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய உடனடித் தேவை தற்போது எழுந்துள்ளது.


இந்த நோக்கங்களை நிறைவேற்ற, தமிழக அரசு, கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மக்களுக்கு விதிக்கப்படப் போவதில்லை.  பாக்வளைகுடாவில், தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகமாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வர்.  நமது நாட்டில் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என அரசு தெரிவித்துள்ளது


தமிழ்நாடு பெருமை


இந்திய கடலோரப் பகுதிகளில் அதிகளவிலான கடற்பசுக்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. அவற்றை பாதுகாக்கும் நோக்கில், உள்ளூர் மீனவர்களுடன் கலந்து ஆலோசித்தும், வல்லுநர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலையே முதன் முறையாக, தமிழ்நாட்டில்  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விசயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.