இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது/அரசியலாக்கப்பட்டுள்ளது  என்று பொருளியலாளரும் முன்னாள் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞருமான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் கணக்கில், " இந்தியாவின் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும்  கொள்முதல் மிகவும் சிக்கலானது. இது, அரசியலாக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டார்.       


மேலும், மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தில் இந்தியா  பின்பற்றவேண்டிய மூன்று எளிய கொள்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.


 










 


1. தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை அரசு செலுத்தவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. 


2. இந்தியா முழுவதும் தடுப்பு மருந்துகளின் விலை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். அந்த விலை ஜீரோவாக இருத்தல் வேண்டும்.  நாடு முழுவதும் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மருந்துகளின் விலை நிர்ணயத்தில் உள்ள வேறுபாடு தேவையற்றது, சிக்கலானது, அறநெறியற்றது மற்றும் எளிதாக செயல்படுத்த முடியாதது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடும். 


3.  அனைத்து தடுப்பு மருந்துகளின் கொள்முதல் செலவுகளை மத்திய அரசே ஏற்கவேண்டும். 






ஏன்?


- வைரஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மதிப்பதில்லை.
- மாநிலங்களை விட  மத்திய அரசே சிறந்த நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது.  
- காப்பாற்றப்படப் போகும் மனித உயிர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பு மருந்துகளுக்கான "நிதி செலவுகள்" மிகவும் அற்பமானவை - அரவிந்த் சுப்பிரமணியன் தனது ட்விட்டர் குறிப்பில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.


முன்னதாக, மத்திய அரசு மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை அறிவித்தது. இதன் படி, கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர். மேலும் , தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள்  தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்,  முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும். தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது " என்று தெரிவித்தது.