மியான்மரின் ராக்கைன் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்தியா வெளியுறவுத் துறை, அறிவுறுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான சூழலை கருத்தில் கொண்டு , இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) கேட்டுக் கொண்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் அரக்கான் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவின் கை ஓங்கி இருக்கிறது. இதனிடையே சமீப ஆண்டுகளாக மியான்மர் நாட்டிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைவது அதிகரித்து வருகிறது. மியான்மரில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியா-மியான்மர் இடையே உள்ள 1,643 கிலோமீட்டர் எல்லையில் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கி.மீ நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படுகிறது. வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் யாரும் மியான்மரில் இருக்கும் ராக்கைன் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அப்பகுதியில் இருக்கு இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ராக்கைன் மாநிலம் மற்றும் பல பிராந்தியங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஆயுதமேந்திய இனக்குழுக்களுக்கும் - மியான்மர் இராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மியான்மர் ராணுவம் தனது எதிரிகளையும், ஆளும் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களையும் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மியான்மர் இந்தியாவின் மூலோபாய அண்டை நாடுகளில் ஒன்றாகும், மேலும் இது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மற்றும் மணிப்பூர் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த வாரம், அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைக்க இந்தியா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.