ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே 203 என்ற தானியங்கி ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது. வரும் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. 




ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இந்த வகை துப்பாகிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்திய ராணுவத்தில் தற்போது 7.62 மி.மீ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலாக ஏ.கே. 203 துப்பாக்கிகள் தயாரிப்பின் முடிவை மத்திய அரசு கையில் எடுத்து அதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இது 7.62 x 39 மி.மீ  காலிபர் துப்பாக்கி. 


ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் நவீன வடிவமாக அமைந்திருக்கும் இந்த ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுத தளவாடங்களை தயாரிக்கும் மிக்கைல் கலாஷ்னிக்கோவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ரஷ்யா - இந்தியா நாடுகளுக்கிடையேயான இதுதொடர்பான பேச்சுவார்த்தை இழுக்கடித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 




இந்த ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஷ்யா அதிபர் புதின், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். இந்த ஏ.கே 203 துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை உழிழும் சக்தி வாய்ந்தவை. குறைவான எடை கொண்ட இந்த வகை துப்பாக்கிகள் துல்லியமாகவும் ஆழமாக பாயும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. காலநிலை மாற்றத்திலும் கச்சிதமாக இலக்கை நோக்கி பாயும் எனவும் எளிதில் பராமரிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் முதல் 7 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் நமது நாட்டு பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப்படும் என்றும், அதன்பின் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண