குடியரசு தலைவர் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 62இன் படி, குடியரசு தலைவரின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும். கடைசியாக, 2017ஆம் ஆண்டு, ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20ஆம் தேதி, முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் குடியரசு தலைவரை எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது, நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்கின்றனர்.
அதாவது, 543 மக்களவை உறுப்பினர்கள், 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பர். மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு வேறுபடுகிறது. எலக்டோரல் காலேஜ் முறைப்படி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்களின் மதிப்பு அதிகமாக கணக்கிடப்படுகிறது.
அடுத்தப்படியாக மகாராஷ்டிராவுக்கும் பின்னர், மேற்குவங்கத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அதிகபட்ச மதிப்பு வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணமாக, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவைக்கிடையே உறவு சுமூகமாக இல்லாத காரணத்தால் அவர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த காலங்களில், கூட்டணி தர்மத்தை மீறி ஐக்கிய ஜனதா தளம் செயல்பட்டிருப்பதால் குடியரசு தலைவர் தேர்திலில் அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 2012 மற்றும் 2017 குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கே வாக்களித்தது. 2012ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பி.ஏ. சங்மா களமிறக்கப்பட்டாலும் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கே ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்