Ind Pak Tension: செனாப் நதி நீரை முறையாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் பலன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு ”நோ”
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இந்துஸ் நீர் ஒப்பந்த்தைத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஜம்மு - கஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த நீரை சேமித்து வைத்து முறையாக பயன்படுத்தி பலனடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, செனாப் நதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் ஆகிய மின் திட்டங்களுக்கான நீர்தேக்கங்களை சுத்தப்படுத்தி தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், குளிர்காலத்தில் அதிகரிக்கும் பாகிஸ்தானை நோக்கிய நீர் ஓட்டத்தை சேமித்து, அதனை முறையாக பயன்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மூன்று நதிகளின் நீர் ஆதாரம்:
பாகிஸ்தான் உடனான இந்துஸ் நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்துஸ், ஜீலம், மற்றும் செனாப் நதி நீரை சேமிப்பதற்கான விரிவான திட்டத்தில் இந்த நீர் தேக்கங்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் அடங்கும். சுத்திகரிப்பு என்பது அதிகரிப்படியான நீரோட்டத்தை குறிப்பிட்ட திசையில் செலுத்தி, அதன் பாதையில் உள்ள இடர்களை அகற்றுவதாகவும். பெரும் வடிவிலான இடர்கள் தூர்வாரும் பணிகள் மூலம் அகற்றப்பட உள்ளன. ஒப்பந்த நிறுத்தத்தால் எந்தவொரு விதிகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லாததால், எந்தவொரு திட்டத்தையும் பாகிஸ்தானின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் இந்தியா செயல்படுத்தலாம். இது இந்தியாவிற்கு பல்வேறு நீண்டகால பலன்களை வழங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கும்”
பாக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா போன்ற சிறிய நீர் சேமிப்பு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஓரிரு நாட்களிலேயே செய்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதெல்லாம் குறுகிய காலத்திற்கான நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரம், தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நீர் மின் திட்டங்களான பாகல் தல் ( 1000 MW), ராட்லே ( 850 MW), கிரு ( 624 MW) மற்றும் க்வார் ( 540 MW) ஆகியவை இந்தியாவிற்கு குறுகிய காலத்திற்கும் அதிகமான காலத்திற்கு பயனளிக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிஷன் கங்கா வழியாக பாயும் 9 அடி கன நீரை தடுத்தும் இந்தியா மின்சார உற்பத்தியை மேற்கொள்ளலாம் என முன்னாள் அரசு ஊழியர்கள் கணிக்கின்றனர்.
புதியதாக 4 நீர் மின் திட்டங்கள்:
காஷ்மீரில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருபவை மட்டுமின்றி, 4 புதிய நீர் மின் திட்டங்களையும் இந்தியா பரிசீலித்து வருகிறது. அவை மேற்கிலிருந்து பாயும் நதிகளின் நீராதாரத்தை நீர்தேக்கங்களில் உதவியுடன் முறையாக பயன்படுத்தி பலனடைய உதவும் என கூறப்படுகிறது. இந்த திட்டங்கள் ஜம்மு & காஷ்மீரில் நீர் மின் திறனை 4000 மெகாவாட்டிலிருந்து 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தும். கூடுதலாக அந்த யூனியன் பிரதேசம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களின் நீர் சேமிப்பு திறனும் அதிகரிக்கும். இதனால், மின்சார தேவை சுயமாக பூர்த்தி செய்யப்படுவது மட்டுமின்றி, நிலத்தடி நீர் ஆதாரம் பெருகி விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
- சாவல்கோட் நீர் மின் திட்டம் ( 1,856 MW)
- கிர்தய் நீர் மின் திட்டம் ( 930 MW)
- உரி நீர் மின் திட்டம் ( 240 MW) ஆகிய திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதுபோக 260 MW திறன் கொண்ட டல்ஹஸ்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.