காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரைத் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த 100 தீவிரவாதிகள் உயிரிழந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்:

இதன்காரணமாக இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவமும் முழு கண்காணிப்பிலும், முழுவதும் தயார் நிலையிலும் இருந்தனர். இ்ந்த நிலையில், இந்தியா மீது இன்று இரவு பாகிஸ்தான் திடீரென தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் நடுவானிலே தாக்கி அழித்தது. 

அடுத்த 3 நாட்கள் விடுமுறை:

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணமாக ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதல் வீரியத்தை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நிலைமை மாறி வருவதைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் - அடுத்த மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்படும் என்று இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஆயத்த நிலையில் இந்தியா:

பஞ்சாப் மட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் அமைந்துள்ள மாநிலங்கள் அனைத்தும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்படைகளும் தயாராக உள்ள நிலையில் எந்த திசையில் இருந்தும் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலை சமாளிக்க இந்திய வீரர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.