பகல்ஹாம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்தியாவின் இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
பாகிஸ்தான் உள்ளே நுழைந்து இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்தியா முறியடித்தது. இருப்பினும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இரு நாட்டு எல்லையோர மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர்.
இயல்பு நிலைக்குத் திரும்பிய காஷ்மீர்:
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்பந்தமான பிறகு மீண்டும் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ட்ரோன்கள் தென்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் இன்று காலை மக்கள் எப்போதும் போல தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் வழக்கம்போல கிளம்பபி தங்களது பணிக்குச் செல்லும் வீடியோவை ஏஎன்ஐ பகிர்ந்துள்ளது.
இரவில் தென்பட்ட ட்ரோன்கள்:
ஆனாலும் சில இடங்களில் காஷ்மீரில் நேற்று ட்ரோன்கள் தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எந்த வித தாக்குதலும் நடந்ததாக தகவல் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுமார் 1222 கி.மீட்டர் எல்லையை இந்தியா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.
அங்குள்ள ராவல்கோட் - பூஞ்ச், சகோதி - உரி, சலியானா - தித்வால், டாடாபானி - மேந்தேர், ஹாஜி பீர் - சிலிகோட் இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் ஆகும் இந்த இடங்களே எல்லை கட்டுப்பாட்டு கோடுகளாகவும் குறிப்பிடப்படுகிறது.
மோடி எச்சரிக்கை:
இந்தியா - பாகிஸ்தான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் நேற்று நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி இந்த மோதல் தற்காலிகமானது என்றும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், பாகிஸ்தான் கெஞ்சியது என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் எதிர்காலத்தில் போராகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.