காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் 26 பேரை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்திலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியது. 

ஆபரேஷன் சிந்தூர்:

இந்த சம்பவத்திற்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் இருந்த 9 இடத்தில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நாட்டின் 200 கி.மீட்டர் பரப்பளவு வரை உள்ளே சென்று தாக்குதல் நடத்திய இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருந்தார். 

இந்தியா சரமாரி தாக்குதல்:

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த இந்திய பாதுகாப்பு துறை, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானின் ராணுவ ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. நேற்று இரவு இந்தியாவின் ஜம்மு, ஜெய்சல்மார், பதன்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீது நடத்த முயற்சித்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்ததுடன், அவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக லாகூரில் இந்திய தரைப்படை தனது தாக்குதலை நடத்தியுள்ளது. 

நேற்று இஸ்லாமாபாத்தில் தாக்குதலை நடத்தியுள்ள சமயத்தில் இரவில் லாகூர் மற்றும் சியால்கோட்டில் இந்திய தரைப்படை தனது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய கடற்படை கராச்சியில் தனது தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் அமைந்துள்ள துறைமுகம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய துறைமுகம் ஆகும். 

காலியாகும் முக்கிய நகரங்கள்:

இந்திய கடற்படையின் மிகப்பெரிய பலமான ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்து  கராச்சி துறைமுகம் நோக்கி தாக்குதலை நடத்தியது இந்தியா. இதில் கராச்சி துறைமுகம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், பாகிஸ்தான் நாட்டின் கடற்படை தளம் ஒன்றையும் ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள எம்.ஏ.ஜி.-29 மூலமாக தாக்கினர். 

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா 100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.  இதில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் என பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது.

முப்படைகளும் தொடர் தாக்குதல்:

இந்தியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவின் காஷ்மீர்,  பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லைகளில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானின் முயற்சியும் வீழ்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் இந்தியாவின் முப்படைகளும் கதிகலங்க வைத்து வருகிறது. 

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தி வரும் இந்த தாக்குதல், இதனால் ஏற்பட்டுள்ள  அச்சம் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த பதற்றமான சூழலால் இரு நாட்டு மக்களும் மிகுந்த வேதனையிலும், அச்சத்திலும் உள்ளனர்.