உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் சுற்றுச்சுவரை, யமுனை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்:


வடமாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதோடு, யமுனை நதியில் வெள்ளப்பஎருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால், திங்கட்கிழமை அன்று யமுனை வெள்ளம் தாஜ்மஹாலின் பின்புற சுவரை  தொட்டவாறு பாய்ந்தோடுகிறது. தாஜ்மஹாலுக்கு பின்புறம் உள்ள தோட்டம் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளது.  இத்தகைய சம்பவம் நிகழ்வது கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். யமுனை நதியில் தற்போதைய சூழலில் 497.7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


45 ஆண்டுகளுக்கு முன்பு..!


1978 ஆம் ஆண்டில், யமுனையின் நீர்மட்டம் 508 அடியாக உயர்ந்தது. இது ஆக்ராவில் உள்ள அந்த யமுனை ஆற்றின் அதிகபட்ச வெள்ள அளவாகும். இந்த அளவீடானது தாஜ்மஹாலின் வடக்குப்பகுதியில் உள்ள பாசாய் காட் புர்ஜின் சுவரில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், நினைவுச்சின்னத்தின் அடித்தளத்தில் உள்ள 22 அறைகளுக்குள் தண்ணீர் புகுந்து, சேறும் சகதியுமாக மாறியது. பின்னர், தொல்லியல் துறையினரால் அங்கிருந்த மரக்கதவுகள் அகற்றப்பட்டு, பாசாய் மற்றும் துஷெரா கண்வாய் பகுதிகளில் இருந்த நுழைவாயில்களில் சுவர்கள் அமைக்கப்பட்டன.


தொல்லியல் துறை நம்பிக்கை:


தற்போதைய சூழல் தொடர்பாக பேசியுள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் “அதிக வெள்ளத்தின் போது கூட பிரதான கல்லறைக்குள் தண்ணீர் வராத வகையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டுள்ளது” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தாஜ் மஹால் வரலாறு:


முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரை நினைவுகூறும் வகையில் பெரும் பொருட்செலவில் தாஜ் மஹாலை கட்டி எழுப்பினார். இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர முக்கிய காரணம் தாஜ் மஹாலின் கட்டட அமைப்பு மட்டுமின்றி,  அதன் அழகை மேம்படுத்த பொருத்தப்பட்டுள்ள உலகின் அதிக விலை உயர்ந்த பல்வேறு விதமான பளிங்கு கற்களும் தான். 


குறிப்பாக தாஜ் மஹாலில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்  தன்மையை கொண்ட காரணத்தால் தான், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் தாஜ் மஹால் வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கிறது.  அதன்படி,  காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும்  ஒளிரும் தாஜ் மஹால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் தோற்றமளித்து  கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த அழகியலை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்கள் உட்பட, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ரா வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.