மணிப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  பெண்களை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பாதிக்கப்பட்ட பெண்களை, பின்னர், அந்த கொடூர கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த சம்பவம், நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


மணிப்பூருக்கு சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள்:


கடந்த ஜூலை 20ஆம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முற்றிலும் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இருப்பினும், குறுகிய விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தின் அனைத்து அவை நடவடிக்கைகளும் முடங்கி போயுள்ளன. இதற்கிடையே, இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய குழு மணிப்பூருக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


நேற்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்ற அவர்கள், சுராசந்த்பூர், விஷ்ணுபூர் உள்பட வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது, மக்கள் தங்களிடம் பகிர்ந்து கொண்டவற்றையும் தங்களின் அனுபவங்களையும் எம்பிக்கள் குழு ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டனர்.


"அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன"


இதனை தொடர்ந்து, ஆளுநரிடம் அவர்கள் அளித்த கடிதத்தில், "அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு மற்றும் குடியேற்றம் மிகவும் அவசரமானது. மணிப்பூரில் கடந்த 89 நாட்களாக சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம், மணிப்பூரில் நடந்த வன்முறையில் அவரின் வெளிப்படையான அலட்சியத்தைக் காட்டுகிறது. கலவரத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மாதிரியாக இரு சமூகத்தினரின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியே தெரிகிறது. 


கடந்த சில நாட்களாக இடைவிடாத துப்பாக்கிச் சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைப்புச் செய்திகள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன என்பதை நிறுவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.