காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்துவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.


சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:


வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. மாறி வரும தட்பவெப்ப நிலையால் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த நிலையில், இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, 12,852 சிறுத்தைகள் இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு 8 சதவிகிதம் உயர்ந்து 13,874 சிறுத்தைகள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன.


தமிழ்நாட்டுக்கு 4ஆவது இடம்:


அதற்கு அடுத்தப்படியாக, மகாராஷ்டிராவில் 1,985 சிறுத்தைகளும் கர்நாடகாவில் 1,879 சிறுத்தைகளும் உள்ளன. அதிக சிறுத்தைகள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகள் உள்ளன. உத்தரகாண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. 


உத்தரகாண்டில் சிறுத்தைகளை வேட்டையாடியதாலும் மனித - வனவிலங்கு மோதலாலும் அதன் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 3 மாநிலங்களில் மட்டும் 349 சிறுத்தைகள் உள்ளன.


இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் சிறுத்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகள் அதிகம் வாழும் புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புலிகள் போல் அல்லாமல் சிறுத்தைகள் சூழலை ஏற்று கொண்டு வாழும் தன்மை கொண்டது. புலிகள் பெரும்பாலும் வனவிலங்கு சரணாலயங்களில் மட்டுமே வாழும். ஆனால், கிராமங்கள், நகரங்களிலும் சிறுத்தைகளை காணலாம்.


 






சிறுத்தைகள் கணக்கெடுப்பை நடத்திய இந்திய வனவிலங்கு அமைப்பை சேர்ந்த கமர் குரேஷி, இதுகுறித்து கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்தான் மூன்றில் ஒரு சிறுத்தைகள் வாழ்கின்றன. புலிகள் சரணாலயத்தை பாதுகாக்கும் அதே சமயத்தில் சிறுத்தைகள் வாழும் இடத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார்.


இதையும் படிக்க: Anant Ambani - Radhika : இவான்கா டிரம்ப் முதல் ஃபேஸ்புக் நிறுவனர் வரை.. களைகட்டும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்