உண்மையிலேயே இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கோஸ்டாரிகா, நெதர்லாந்து, தென் கொரியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய ஜனநாயகத்தின் உச்சி மாநாட்டில் இணையம் வழியாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல. சமத்துவ உணர்வு என கூறியுள்ளார்.
மகாபாரதம், வேதத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி:
இதில் விரிவாக பேசிய மோடி, "மகாபாரதம், வேதங்கள் மற்றும் அனைத்து வரலாற்றுக் குறிப்புகளும், ஒரே குடும்பத்தை சேராத ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் சிந்தனை பண்டைய இந்தியாவில், உலகின் பிற பகுதிகளுக்கு முன்பே ஒரு பொதுவான அம்சமாக இருந்தது.
பண்டைய இந்தியாவில் இருந்த குடியரசு மாநிலங்களில் ஒரு குடும்பத்தை சேராத ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன.
அப்படியானால், உண்மையில், இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம். மகாபாரதத்தில் குடிமக்களின் முதல் கடமை அவர்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று விவரிக்கப்பட்டுள்ளது. பரந்த அடிப்படையிலான ஆலோசனை அமைப்புகளால் செயல்படுத்தப்படும் அரசியல் அதிகாரத்தைப் பற்றி வேதங்கள் பேசுகின்றன" என்றார்.
இந்தியாவின் சவால்கள்:
காலநிலை மாற்றம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பேசிய அவர், "இந்தியாவுக்கு பல உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதுவே உலகின் ஜனநாயகத்திற்கான சிறந்த விளம்பரம்" என்றார்.
உச்ச மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "கருத்துச் சுதந்திரம் வீழ்ச்சியில் உள்ளது. எதிர்ப்புக் குரல்கள் மௌனிக்கப்படுகின்றன. மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர், அதே சமயம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் பழிவாங்கலை எதிர்கொள்கின்றனர்" என்றார்.
இந்த உச்ச மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனநாயகத்தின் உச்ச மாநாட்டின் முதல் பதிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் மாலத்தீவுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
ஆனால், பூடான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தபோதிலும், கடந்த முறையை போன்றே இந்த முறையும் சீனாவுக்கு அழைப்பு விடுக்காத காரணத்தால் உச்ச மாநாட்டை புறக்கணித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பிரச்னைகளில் அமெரிக்கா மற்றும் உச்சிமாநாட்டை இணைந்து நடத்திய மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் இருதரப்பு உறவில் ஈடுபடும்" என்றார்.
ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்ற கருத்தை, கடந்த 2021ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் மோடி முன்னதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.