டிசம்பர் 31ஆம் தேதி வரை, வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காயத்தின் விலை:


கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம், வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயரும் என செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம், இதுநாள் வரையில், தக்காளி விலையும் சராசரியாக அதிகரித்து வருகிறது.


ஆனால், சமீபத்திய தரவுகள், தக்காளியின் விலை ஏற்றம் சற்று குறைந்திருப்பதை காட்டுகிறது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு அரசு ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னதாக, சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. ஜூலை மாதத்தில், இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 7.44 சதவிகிதமாக பதிவானது.


ரிசர்வ் வங்கியின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் உச்ச வரம்பை (6 சதவிகிதத்தை) காட்டிலும் அதிகமாக ஜூலை மாதத்தில் பதிவானது. உணவு மற்றும் காய்கறிகளின் விலை ஏற்றம் காரணமாக நுகர்வோர் விலைக் குறியீடு அதிகமாக பதிவாகியிருந்தது.


15 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலை பணவீக்கம் உயர்வு:


நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 15 மாதங்களில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 2.57 சதவீதம் அதிகரித்து 7.44 சதவீதமானது.  ஜூன் மாதம் 4.55 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பண வீக்க விகிதம் ஜூலையில் 11.5 சதவீதமாக உயர்ந்தது.


கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் 11 சதவீதமாக இருக்கும் நிலையில் நகரங்களில் அது 12.3 சதவீதமாக உயர்ந்தது. பணவீக்க விகிதத்தை 6 சதவீதத்திற்குள் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள நிலையில், 7.44 சதவீதமாக உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால் 2023 ஜூலையில் காய்கறி விலை 37.43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, உணவு தானியங்களின் விலை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு ஜூலை மாதத்தில 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தது.


ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆர்பிஐ  வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று தெரிவித்தது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. இதற்கான காரணமானது,  தக்காளி மற்றும் பிற காய்றிகளில் விலை சமீபகாலமாக உயர்ந்துள்ளதால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதன்படியே, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.