நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை இந்தியா, அங்கு அனுப்பியுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆபரேஷன் பிரம்மா மூலம் 80 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.


ஆபத்தில் உதவும் இந்தியா:


மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்து வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன. இந்த பேரழிவு தாய்லாந்து வரை பரவியது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று 6.4 ரிக்டர் அளவில் பதிவானதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிட இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை இந்தியா, அங்கு அனுப்பியுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆபரேஷன் பிரம்மா மூலம் 80 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.


ஆபரேஷன் பிரம்மா:


கான்கிரீட் வெட்டிகள், துளையிடும் இயந்திரங்கள், சுத்தியல் போன்ற மீட்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மியான்மர் விரைந்துள்ளனர்.


இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், "காசியாபாத்தில் உள்ள ஹிண்டனில் இருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் 80 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கொண்ட குழு மியான்மருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழுக்கள் இன்று மாலைக்குள் மியான்மரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமாண்டன்ட் பி கே திவாரி தலைமையில் ஒரு குழு சென்றுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






சர்வதேச தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு (INSARAG) விதிமுறைகளின்படி, இடிந்து விழுந்த கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு, மீட்பு நாய்களையும் குழு அழைத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2015ஆம் ஆண்டு, நேபாள நிலநடுக்கம் மற்றும் 2023 துருக்கி நிலநடுக்கத்தின் போது இந்தியா இதற்கு முன்பு இரண்டு முறை வெளிநாடுகளுக்கு NDRF படையை அனுப்பியுள்ளது.