மத்திய அரசின் BHIM யுபிஐ செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக, அந்த செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், பீம் யுபிஐ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

பீம் செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க ஊக்கத்தொகை - மத்திய அரசு

இன்று மக்களிடையே பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள், ஜி பே, பே.டி.எம், போன்பே போன்றவைதான். ஆனால், மத்திய அரசு பீம் என்ற யுபிஐ செயலி வைத்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே சொல்லலாம். அதன் பயன்பாடும் சொற்ப அளவே உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தில், இந்த பீம் யுபிஐ செயலியும் ஒன்று. சிறு வணிகர்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குள் கொண்டுவர மத்திய அரசு உருவாக்கியதுதான் இந்த செயலி. தற்போது இதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்கும் வகையில், பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளது.

Continues below advertisement

ரூ.2000-க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 31-ம் தேதி வரை, பீம் யுபிஐ மூலம், ரூ.2000-த்திற்குள் வணிகர்களுக்கு பணம் செலுத்தியுள்ள தனி நபர்களுக்கு, 0.15 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இது தனி நபர் மற்றும் வணிகர்களிடையே நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் ஒரு பரிவர்த்தனை ரூ.2000-க்கு மேல் இருக்கக் கூடாது.

இந்த ஊக்கத் தொகை அனைத்து யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குவதால், அரசின் பீம் யுபிஐ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒவ்வொரு வருடமும், ரூ.2000-த்திற்கு கீழ் எத்தனை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கணக்கிட்டு, மார்ச் 31-ம் தேதி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல், தற்போது, பெட்டிக் கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை செய்யப்பட்டுவரும் மற்ற அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.