இந்தியா தற்போது அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக்கியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


ஜி-20 மாநாடு:


தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில், காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியா தற்போது முதலீடுகளை வரவேற்பது, வாய்ப்புகளை வழங்குவது, முதலீட்டாளர்களின் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருப்பது மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.


இந்தியா மாறிவிட்டது - மோடி:


அதன்படி நிகழ்ச்சியில் பேசியபோது “முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் ரெட் டேப் சூழலிலிருந்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் சூழலுக்கு நாங்கள் மாறிவிட்டோம். அந்நிய நேரடி முதலீடுகளை தாராளமயமாக்கியுள்ளோம். முதலீட்டாளர்களுக்காக திறந்த தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்தியா பிரத்யேக சரக்கு வழித்தடங்களை நிறுவியுள்ளது மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்கியுள்ளது.


”சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்”


 ​​மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் போன்ற முன்முயற்சிகள் நாட்டின் உற்பத்திக்கு ஊக்கமளித்தன மற்றும் நாட்டில் கொள்கை ஸ்திரத்தன்மை ஏற்பட வழிவகுத்தன. அடுத்த சில வருடங்களில் இந்தியாவை உலககின் மூன்றவாது பெரிய பொருளாதார நாடக மாற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, உலகின் 5வது மிகப்பெரிய பொருதார நாடாக இந்தியா மாறியுள்ளது. 2014ம் ஆண்டு சீர்திருத்தத்தை கொண்டு வந்து சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற பயணத்தை தொடங்கினோம்.


வர்த்தகம் முக்கியமானது


கருத்துகள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பரிமாற்றத்திற்கு வர்த்தகம் வழிவகுக்கிறது.  அதே நேரத்தில் வரலாறு முழுவதும் மக்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது. கோடிக்கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுத்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தை சோதித்துள்ளது. எனவே, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது ஜி20 நாடுகளின் பொறுப்பு. வர்த்தக ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான உயர்மட்டக் கோட்பாடுகள்,  நாடுகளுக்கு எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தவும், இணக்கச் சுமைகளைக் குறைக்கவும் உதவும்.  


”டிஜிட்டல் மயம் அவசியம்”


ஆன்லைன் ஒற்றை மறைமுக வரிக்கு இந்தியா மாறியுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரு உள் சந்தையை உருவாக்க உதவியது. வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தின் சக்தி மறுக்க முடியாதது. இந்தியாவின் ஒருங்கிணைந்த தளவாடங்களுக்கான ஆன்லைன் பிளாட்பார்ம்கள், ​​வர்த்தக தளவாடங்களை மலிவானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க், டிஜிட்டல் சந்தை சூழல் அமைப்பை ஜனநாயகப்படுத்தும் கேம்-சேஞ்சர். பணப்பரிமாற்றத்திற்கான யுபிஐ மூலம் நாங்கள் ஏற்கனவே அதைச் செய்துள்ளோம்" என பிரதமர் மோடி பேசினார்.