தேசிய தலைநகர் புதுதில்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி (அழியாத படை வீரரின் சுடர்) நினைவகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் தீப்பிழம்பினை அணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில், குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், டெல்லி ராஜபாதையில் ராணுவ அணிவகுப்பும், நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.
பொதுவாக, இந்த அணி வகுப்பு இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் தொடங்குகிறது. அங்கு பாரதப் பிரதமர் நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின், நாட்டின் குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.
இந்நிலையில், இந்தாண்டு குடியரசுத் தின விழாவில், அமர் ஜவான் ஜோதி நினைவகத்தில் உள்ள தீப்பிழம்பு (அணையா விளக்கு), 2019-ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவு சின்னத்திற்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமர் ஜோதி ஜவான்: 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது இறந்த இந்திய ஆயுதப்படைகளின் தியாகிகள் மற்றும் அறியப்படாத வீரர்களை நினைவுகூரும் வகையில் அமர் ஜவான் ஜோதி நினைவுச்சின்னம் இந்திய கேட்டில் கட்டப்பட்டது. இதனை 1972 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.
"அமர் ஜவான்" (அழியாத படை வீரர்) என்று கல்லறையின் நான்கு பக்கங்களிலும் தங்கத்தால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியின் மீது எல் 1 சுய-ஏற்றுதல் துப்பாக்கி நின்ற நிலையில் காணப்படுகிறது. அதில் அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் தலைக்கவசம் காணப்படுகிறது. பீடத்தில் நான்கு அடுப்புகள் பிணைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது. அது 1971 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இயற்கை எரிவளி மூலமாக தீப்பிழம்புடன் எரிந்து கொண்டிருக்கிறது.
தேசிய போர் நினைவு சின்னம்:
சுதந்திரத்திற்கு பிறகு நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதிநவீன வடிவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அமைதி காக்கும் படைகள் (Peace Keeping Missions) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பங்கேற்று, அதிகபட்ச தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறுவதாகவும் இந்த தேசிய போர் நினைவுச் சின்னம் அமைகிறது.
இந்த தேசிய போர் நினைவுச் சின்னம், ‘அமர் சக்ரா’ அல்லது அழியா வட்டம், ‘வீர் சக்ரா’ அல்லது துணிச்சல் வட்டம், ‘தியாக சக்ரா’ அல்லது தியாக வட்டம், ‘ரக்ஷா சக்ரா’ அல்லது பாதுகாப்பு வட்டம் என்ற நான்கு வட்டங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் அமைந்த நினைவுத்தூண், அணையா விளக்கு, இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகள் சந்தித்த முக்கிய போர்களை சித்தரிக்கும் வெண்கலத்தாலான ஆறு சித்திரங்கள் இந்த தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.
இன்று அணைகிறது:
இந்நிலையில், ஒரே இந்திய கேட்டில் இரண்டு நினைவுச் சின்னம் இருப்பது அவசியமற்றதாக மத்திய அரசு உணர்கிறது. மேலும், 2019ல் கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னமே சுதந்திர இந்தியாவின் ஒட்டுமொத்த விருப்பத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்றும் கருதுகிறது. இதனையடுத்து, இன்று மாலை 3.30 மணியளவில் பாதுகாப்பு படை தலைவர்கள் குழுவின்(CISC) , ஒருங்கிணைந்த தலைவர் முன்னிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள சுடர், வெற்றி ஓட்டம் மூலம் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள, அணையா விளக்குடன் மரபு தழுவிய முறையில் இந்த சுடர் ஒன்றிணைக்கப்படுகிறது.
எதிர்ப்பு:
'புது இந்தியா' என்ற பெயரில் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மத்திய அரசு மாற்றியமைத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.