Bullet Train India: நத்தை வேகத்தில் நாட்டின் முதல் புல்லட் ரயில் பணிகள்; எப்போதான் முடியும்? அதிர்ச்சி அறிக்கை!
India First Bullet Train Project: மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் 2026-ல் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2033-ல்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் காரிடார் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் ரயில் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜப்பான் தொழில்நுட்பத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும்
ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 320 – 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் பயணம் அமையும் என்று கூறப்பட்டது. இது மும்பை மற்றும் அகமதாபாத் இடையில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு இடையிலான 508 கி.மீ. தூரத்தை விரைவில் கடக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் ரயில் பயணத்தை மறு வரையறை செய்து, வேகம், செயல்திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடம் 12 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதில் 8 குஜராத்திலும் 4 மகாராஷ்டிராவிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு
இந்த நிலையில், 2024- 25அம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 255 கி.மீ. தூர பால (viaducts) பணிகள் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் வதோதரா அருகே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனந்த், பருச், சூரத், வாபி மற்றும் பிலிமோரா உள்ளிட்ட பல முக்கிய நிலையங்கள் மேம்பட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ளன.
2033-ஆம் ஆண்டில்தான் பயன்பாடு
முன்னதாக, புல்லட் ரயில் பணிகள் 2026-ல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 2030ஆம் ஆண்டில்தான் மும்பை- அகமாதாபாத் புல்லட் ரயில் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் 2033-ஆம் ஆண்டில்தான் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதத்துக்கு என்ன காரணம்?
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள், கொள்கை ஒப்புதல்கள் மற்றும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த தாமதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் 2047ஆம் ஆண்டுக்குள் 7,000 கி.மீ அதி வேக ரயிலை செயல்படுத்துவதற்கான நீண்டகால தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. எதிர்கால வழித்தடங்களுக்கு இந்த முதல் புல்லட் ரயில் திட்டம் மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.