நம்மை வியக்க வைப்பதில் விஞ்ஞான உலகம் எப்போதும் தயங்கியதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகளால் தினம், தினம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகிறோம். நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத வேலைகளை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்து வருகிறது. 


நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி:


இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆகும். 


சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அமெரிக்காவின் iLearning Engines (ILE) நிறுவனம், Vedhik eSchool ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.


வழக்கம் போல இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அவர்களின் வேலையை செய்வார்கள். அதே சமயத்தில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு உதவி புரியும். எடுத்துக்காட்டாக, பாடங்களில் ஆசிரியர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் செயற்கை நுண்ணறிவு அதைத் தீர்த்து வைக்கும். அதேபோல, கடினமான பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் உத்தியையும் ஆசிரியர்களுக்கு அது கற்பிக்கும்.


பள்ளியின் சிறப்பம்சங்கள்:


இந்த செயற்கை நுண்ணறிவு பள்ளியானது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கானதாக இருக்கும். வெவ்வேறு நிலை சோதனைகள், திறன் தேர்வுகள், ஆலோசனைகள், வேலைக்கான திட்டமிடல் மற்றும் முக்கியத் தரவுகளை சிறப்பாக நினைவில் வைத்துக் கொள்வதற்கான உத்திகள் போன்ற பல பயனுள்ள விஷயங்களை  மாணவர்கள் பெறுவார்கள்.


பள்ளியில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வழக்கமான பாடங்களுக்கு உதவுவது மட்டுமின்றி, நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்படுவது, குரூப் டிஸ்கஷனில் பேசுவது, கணிதத்தில் சிறந்து விளங்குவது, சிறப்பாக எழுதுவது, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவற்றையும் பயிற்றுவக்கிறது. 


மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இந்த பள்ளி வழக்கமான பள்ளியாக இல்லாமல், JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது. மாணவர்கள் இத்தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை இந்த செயற்கை நுண்ணறிவு பள்ளி தீர்க்க முயற்சிக்கிறது. இது பள்ளி வேலைகள், சோதனைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்கிறது.


இதையும் படிக்க: Shiv Shakti : நிலவின் ரகசியங்கள் என்னென்ன? சிவசக்தியை சுற்றி வலம் வரும் பிரக்யான் ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட அசத்தல் அப்டேட்