தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல் ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
திடீரென ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா:
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் பதின்மூன்று ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்பட உள்ளது.
உலக நாடுகளில் போர் பதற்றம்:
தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்படும் ஆயுத தளவாடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
* ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள்
* குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள்
* மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள்
* தொலைதூரத்தில் இயக்கப்படும் வான்வழி வாகனங்கள் (RPAVகள்)
* செங்குத்தாக மேலெழுந்து சென்று அதே போன்று தரையிறங்கக் கூடியதுமான போர் விமானங்கள்
* பல்வேறு வகையான ட்ரோன்கள்
* குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்
* பாலிஸ்டிக் தலைக்கவசங்கள்
* விரைந்து எதிர்வினையாற்றும் கனரக மற்றும் நடுத்தர போர் வாகனங்கள்
* இரவில் இலக்கை அடையாளம் காணும் வகையிலான துப்பாக்கி ரகங்கள்
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் பாதுகாப்பு படையினருக்கு உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய - உக்ரைன் நாடுகளுக்கும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்கனவே போர் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில், ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இது, உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க இந்தியா தீவிரம் காட்டி இருக்கிறது.