பிரபல நடிகை மீனா, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அவர் பாஜகவில் இணைய உள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மீனாவின் பதிவு குறித்து தற்போது பார்க்கலாம்.

குடியரசு துணைத் தலைவருடன் இருக்கும் புகைப்படத்துடன் மீனா பதிவு

மீனா இன்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை சந்தித்தபோது தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஜி உடன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தங்களை சந்தித்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன், தங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன், அவை என்னுடைய எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என நம்புகிறேன், உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி“ என மீனா குறிப்பிட்டுள்ளார்.

எகிறிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ஏற்கனவே, மீனா பாஜகவில் சேரப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர் இப்படி ஒரு பதிவை போட்டு, அதில் நிறைய கற்றுக்கொண்டேன், எதிர்காலத்தில் உதவும் என்று கூறியுள்ளதால், அது அரசியலுக்காகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால், மீனா விரைவில் பாஜகவில் இணைவார் என்று அவர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு, வாழ்த்து கூறி வருகின்றனர்.

தோழிகளின் வழியில் மீனா.?

நடிகை மீனாவின் சக காலகட்ட நடிகைகள் பலர் ஏற்கனவே பாஜகவில் இருப்பதால், மீனாவும் அதே வழியில் பயணிக்க உள்ளாரோ என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

அவருடைய தோழிகளான ராதிகா, குஷ்பு, நடன இயக்குநராக கலா மாஸ்டர் என பலர் பாஜக-வில் இணைந்து செயலாற்றிவருகின்றனர். இந்த நிலையில், அந்த வரிசையில் மீனாவும் பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்திகள் சிமீபத்தில் வந்துகொண்டுதான் இருந்தன.

அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மீனாவின் தற்போதைய பதிவு இருக்கிறது. மேலும், பிரதமர் மோடி பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் மீனாவும் கலந்துகொண்டார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதை ரசிகர்கள் உறுதியே செய்துவிட்டனர்.

திரையுலக வாழ்க்கை

தமிழ் திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு கதாநாயகியாகவும் உயர்ந்து, தற்போது வரை அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது காலகட்ட முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்து, தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை பிடித்து வைத்திருந்தவர் நடிகை மீனா. அதோடு, அனைத்து தரப்பு ரசிகர்களின் ப்ரியமான நாயகியாகவும் வலம் வந்தார்.

அது மட்டுமல்லாமல், பின்னாளில் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார் மீனா. இந்நிலையில், தனது கணவரின் மறைவிற்குப் பின் சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த அவரை, தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தற்போது அவர் அரசியலில் பிரவேசிக்கப் போவதற்கான அறிகுறியாக இந்த பதிவை போட்டுள்ளதாக தெரிகிறது. மீனா அரசியலிலும் கலக்குவாரா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.