ரஷ்யாவிடம் இருந்து இந்திய அரசு ஏற்கனவே எண்ணெய் பேரல்களை வாங்கத் தொடங்கியுள்ளது. எண்ணெய் இறக்குமதிக்கான காரணத்தை விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அது நாட்டுக்குத் தேவைப்படும் நேரத்தில் தள்ளுபடி விற்பனையில் வந்துள்ளது.அதனால் வாங்கினோம்’ எனத் தெரிவித்துள்ளார்.


"நாம் ரஷ்யாவிடமிருந்து தற்போது ஏராளமான பீப்பாய்களைப் பெற்றுள்ளோம். இன்னும் 3-4 நாட்களுக்கு தேசிய அளவில் இந்த இறக்குமதி தொடரும் என நினைக்கிறேன். எனது நாட்டின் தேசிய நலன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு நான் எப்போதும் முதலிடம் கொடுப்பேன்" என்று CNBC-TV18 India Business தொலைக்காட்சியின் 17வது கூட்டத்தில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பேசியுள்ளார். ’எரிபொருள் தள்ளுபடியில் கிடைக்கும் என்றால், அதை இந்தியா ஏன் வாங்கக்கூடாது?’ என்றும் நிதியமைச்சர் கேள்வி எழுப்பினார்.


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் புதிய முன்மொழியப்பட்ட ரூபாய்-ரூபிள் வர்த்தக டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தலைநகர் டெல்லி வந்துள்ள நிலையில் நிதியமச்சர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், உக்ரைன் நெருக்கடியால் உலகப் பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிதியாண்டில் 'எச்சரிக்கை கலந்த நம்பிக்கையுடன்' அடியெடுத்து வைப்பதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.



இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உக்ரைன் தரப்பில் அன்டன் கோரினெவிச் பேசும் போது, “ உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். ட்ட விரோத தாக்குதல்களை முன்வைத்து வரும் ரஷ்யா, போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவை போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது