I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற உள்ளது.
ஆலோசனைக் கூட்டம்:
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து, I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதற்கான செயல் திட்டங்களை வகுக்கவும், வழிநடத்தி செல்லவும் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சராத் பவார் இல்லத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கூட்டத்தில், “கூட்டணியின் உத்திகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்” என கூட்டணி கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் என நாட்டின் பெயர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணியின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் விட்டுக்கொடுத்து தொகுதிப் பங்கீட்டை முன்னெடுப்பது குறித்தும் ஏதேனும் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்:
சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவில் காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு (திமுக), ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்), சஞ்சய் ராவத் (சிவசேனா-யுபிடி), தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி), ராகவ் சாதா (ஏஏபி), ஜாவேத் அலி ஆகியோர் உள்ளனர். அதோடு, கான் (SP), JD(U), D ராஜா (CPI), உமர் அப்துல்லா (National Conference), மெகபூபா முப்தி (PDP), மற்றும் CPI-M கட்சியின் தலைவர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதைதொடர்ந்து பெங்களூரு மற்றும் மும்பையில் அடுத்தடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கடைசியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியின் வேலைத்திட்டங்களைத் தீர்மானிக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இது, எதிர்க்கட்சிக் கூட்டணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
பாஜக மீது குற்றச்சாட்டு:
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால், அதே நாளில் நான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது! 56-இன்ச் மார்பு மாதிரியின் கூச்சம் மற்றும் வெறுமையை காட்டும் இந்த நடவடிக்கையை கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது" என்று பிரதமர் மோடியை தாக்கி அபிஷேக் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.