சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.


இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறிய காலிஸ்தான் தீவிரவாதிகள்:


அதேபோல, சமீபத்தில், கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "காலிஸ்தான் தீவிரவாதம், வெளிநாட்டு தலையீடு ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறோம்.


மனம் திறந்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:


கருத்து சுதந்திரம், மதச்சுதந்திரம், அமைதியாக போராட்டம் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை கனடா எப்போதும் பாதுகாக்கும். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதே சமயம், வன்முறையைத் தடுக்கவும், வெறுப்பை பின்னுக்குத் தள்ளவும் நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.


வகுப்புவாத பிரச்னையை பொறுத்தவரையில், ஒரு சிலரின் நடவடிக்கைகள் முழு சமூகத்தையும் அல்லது கனடாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அதன் மறுபக்கம், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் எடுத்துரைத்தோம். வெளிநாட்டு தலையீடுகள் குறித்தும் பேசினோம்" என்றார்.


சமீபத்தில், கனடாவில் ஒட்டப்பட்ட காலிஸ்தான் போஸ்டர்களில் இந்திய தூதர்களின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்திருந்தார்.


இதை தொடர்ந்து, இந்தியாவுக்கான கனட நாட்டு தூதரான கேமரன் மேக்கேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது. கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்கள் குறித்து அவரிடம் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், கனடா அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.


இதையும் படிக்க:


India vs Pakistan Score LIVE: வழிவிட்ட வருணபகவான்.. ஆனாலும் அவுட்ஃபீல்ட் ஈரம்..! ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!