மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 53 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது. 


சிபிஐ விசாரணை:


மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால், கடந்த மே மாதம் 4ம் தேதி பழங்குடியின பெண்கள் 2 பேர் ஆடைகள் அகற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதோடு, கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து,  உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி பெண்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணையை கடந்த ஜுலை மாதம் 29ம் தேதி சிபிஐ தொடங்கியது.


53 பேர் கொண்ட குழு:


அதன்படி, மே 4ம் தேதி சம்பவம் மட்டுமின்றி அங்கு நடந்த மற்ற ஆறு வன்முறை வழக்குகள் மற்றும் அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக 53 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ அமைத்துள்ளது. அதில், லவ்லி கட்டியார் மற்றும் நிர்மலா தேவி எனும் எனும் இரண்டு டிஐஜி கேடர் பெண் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.


நீதிமன்றம் சொன்னது என்ன?


முன்னதாக, மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்களை கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கீதா மிட்டல் தலைமையில்  நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவானது மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, நிவாரணம், நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு போன்ற உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை கண்காணிக்கும் எனஉச்சநீதிமன்றம் தெரிவித்தது.


சிபிஐக்கு உத்தரவு:


மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.  சட்டத்தின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்த, குறைந்தபட்சம் துணை எஸ்பி பதவியில் உள்ள ஐந்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தான் விசாரணையை தீவிரப்படுத்தி, 53 பேர் கொண்ட குழுவை சிபிஐ அமைத்துள்ளது.


நடப்பது என்ன?


மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள், வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.