நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
மாஸ் காட்டும் I.N.D.I.A கூட்டணி:
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரே அணியில் இணைந்துள்ள I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நேற்று மும்பையில் நடைபெறே்றது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரச்சாரம் தொடங்கி ஊடகம், சமூக ஊடகம் என அனைத்திலும் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, அடுத்த அதிரடி தயாராகி வருகிறது I.N.D.I.A கூட்டணி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி, நாடு தழுவிய அளவில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்த I.N.D.I.A கூட்டணி முடிவெடுத்துள்ளது.
மும்பை கூட்டத்தில் நடந்தது என்ன?
இதுகுறித்து பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமார் கூறுகையில், "மும்பையில் நடந்து முடிந்த எதிர்க்கட்சி கூட்டணியின் மாநாட்டில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் திணறி போயுள்ளது. இதனால், காரணம் சொல்லாமலேயே இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. காந்தி ஜெயந்தியை நாடு முழுவதும் இந்திய கூட்டணி கொண்டாடும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
இந்திய கூட்டணியை பார்த்து பாஜக பதற்றம் அடைந்துள்ளது. இதனால்தான், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய கூட்டணியின் உள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு, பா.ஜ.,வினருக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.
மும்பையில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும் என இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.
அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அக்கறை சார்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து எழுப்ப கூடிய விரைவில் பேரணிகளை நடத்த இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது.