சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் மனு அளித்துள்ளனர். 

Continues below advertisement

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் முதல் படை வீடு உள்ளது. இந்த கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஒருபுறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறம் இஸ்லாமிய தர்காவும் உள்ளது. இப்படியான நிலையில் மலையின் உச்சியில் உள்ள கல் தூணில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் எனக்கோரி இந்து அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் செயல் அலுவலர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் திருக்கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில் மாலை 6 மணியாகியும் தீபம் ஏற்ற தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். 

Continues below advertisement

2 முறை உத்தரவிட்டும் அனுமதி மறுப்பு

இதனைத் தொடர்ந்து மனுதாரரான ராம ரவிகுமாரை 10 பேருடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள சிஎஸ்ஐஎஃப் வீரர்களை அழைத்துக் கொண்டு சென்று தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் கடைசி வரை அனுமதி அளிக்கவில்லை. இதற்கிடையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்தது. ஆனால் இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து விசாரிப்பார் எனவும் கூறியிருந்தனர். 

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணிக்குள் தீபமேற்ற வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால் அன்றைய நாளிலும் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே டிசம்பர் 3ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் சிஎஸ்ஐஎஃப் தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தார். 

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கி தகுதி நீக்க நோட்டீசை திமுக எம்பிக்கள் வழங்கியது. இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக எம்.பி. துரை வைகோ  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.