ஏ.பி.ஜே.அப்துல் கலாம்:


இளைய தலைமுறையினர் தங்கள் லட்சியத்தை அடைய கனவு காண கூறி மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்தவர் அப்துல் கலாம். 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி, ராமேஸ்வரத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம், தனது பள்ளி மற்றும்கல்லூரி படிப்பை முடித்துவிட்டு DRDOல் விஞ்ஞானியாக, ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து, தனது ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட அப்துல் கலாம் SLV III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி -I என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவச்செய்து சாதனை படைத்தார். இச்சாதனைக்காக பத்ம பூஷன் விருதை வழங்கி, அரசு அவரை கௌரவப்படுத்தியது. தொடர்ந்து அணு ஆயுத சோதனையிலும் ஈடுப்பட்டு இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார். இதனாலேயே ஏவுகணையின் நாயகன் என்று அழைக்கப்படுகிறார். இவரது சேவைகளை பாராட்டி பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகளை வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியது.




மக்கள் வாழ்கையிலும் தனது கரம் பதிய வைத்த அப்துல் கலாம் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். உறங்கும் போது காண்பதல்ல கனவு... உறங்கவிடாமல் செய்வதே கனவு என்று கூறிய அவர் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், தொழில்நுட்ப வல்லுநராகவும்  மட்டும் இல்லாமல் சிறந்த தலைவராகவும் திகழ்ந்தார். இவரது எழுத்தில் உருவான அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவையாக உள்ளன.


இப்படி ஜூலை 27, 2015ம் ஆண்டு மேகாலயாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது வாழ்வின் கடைசி வினாடிகளிலும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்து கொண்டிருந்தார். காலம் பல சென்றாலும் கலாம் காலத்திற்கும் நம்மோடு இருப்பார்.


சி.வி.ராமன்:


இந்தியாவில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞரான சி.வி.ராமன்., ராமன் விளைவுகள் மூலம் நோபல் பரிசு பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தது மட்டுமல்லாமல் அறிவியலுக்கு புதிய பாய்ச்சலையும் ஏற்படுத்தித் தந்தார். 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் சி.வி.ராமன் பிறந்தார். 1907ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை ராமன் முடித்தார். தொடர்ந்து நிதித்துறை தேர்வு எழுதி முதலிடம் பெற்ற அவர், கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலகரானார்.




நிதி துறையில் பணி செய்த போதும் தனது அறிவியல் ஆர்வத்தால் ராமன் தனது வீட்டிலேயே, அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, தினமும் பெரும்பாலான நேரத்தை அங்கேயே கழித்தார். பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட சர்.சி.வி.ராமன் ஒளிச்சிதறல் பற்றி பலவற்றை தாண்டி ராமன் விளைவை 1928ம் ஆண்டு கண்டறிந்தார். இதற்காக அவருக்கு 1930ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இவரின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டம் வழங்கியது. ஆனால் தன்னுடைய பெயரின் முன் அந்த பட்டத்தை உபயோகம் செய்ய விரும்பவில்லை. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ராமன் தனது விடாமுயற்சியில் 1943ம் ஆண்டு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்.  தனது 82 வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்த ராமர் 1970 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். இயற்பியல் துறை இருக்கும் வரை வாழ்ந்துக் சி.வி ராமன் இருந்து கொண்டே இருப்பார்.


விக்கிரம் சாராபாய்


இந்திய விண்வெளி துறையின் தந்தை என அழைக்கப்படும் விக்கிரம் சாராபாய், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் முடித்து, இந்தியா திரும்பிய அவர் , 1947 ஆம் ஆண்டு, இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவுகினார். மிகவும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த சாராபாய்,பணத்தின் மீது நாட்டம் காட்டாமல் அறிவியல் மீது நாட்டம் கொண்டிருந்தார்.




இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முதல் காரணமாக இருந்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் விரிவாக்கினார். இன்றைய இஸ்ரோ நிறுவனமானது இந்திய செயற்கைக்கோள் மட்டுமன்றி வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக செலுத்துகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் விக்ரம் சாராபாய் என்றால் மிகையாகாது.